உதயச்சந்திரன் - வரையத் தொடங்கும் போதே பிடுங்கப்பட்ட தூரிகை :


கீழ்காணவிருக்கும் இந்தக்கட்டுரையை நான் எழுதியிருந்தபோது உதயசந்திரன் ஐஏஎஸ். பள்ளிக்கல்வி செயலராக நியமிக்கப்படவில்லை.  பிறகான சில மாதத்தில் அரவரது நியமனமும், மாற்றங்களும்  இந்த கட்டுரையை பொய்யாக்கியிருந்தது. வருங்காலங்களில் இக்கட்டுரையை யாரேனும் வாசித்தால் என்னை பொய்யன் என்றே மதிப்பிடும்படியான
மாற்றை தமிழக பள்ளிக்கல்வியில் கொண்டு வந்திருந்தார். பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்ட விதம் குறித்த மாற்றமது.. அப்படியான மாற்றத்திற்கு அகமகிழ்ந்தேன்.
தற்போது அவரது துறை மாற்ற உத்தரவு பெரிய அச்சத்தை அரசுப்பள்ளியை நேசிப்போருக்கு உண்டுபண்ணியிருக்கிறது. உதயசந்ததிரன் அவர்கள் மாற்றம் செய்த நாள் பள்ளிக்கல்வியின் கருப்பு நாள். தமிழகத்தில் தீராத சாதி வீச்சம்  போல் இனி மார்க் வீச்சம்  தொடர்ந்து ஒவ்வொரு கல்வியாண்டின் எல்லையிலும் நாசிதுளைக்கும்.  இப்படியே வருடந்தோரும் படிந்து படிந்து அடர்ந்த பிசுக்கு இனி தொடர்ந்து பிசுபிசுக்கும். . இனி வாசிக்கலாம்.






பிசுபிசுப்பு:
************************
    -சக.முத்துக்கண்ணன்

வெள்ளியன்று  மனைவியோடு
கோவிலுக்குச் செல்லுதலில்  கமகமக்கும் விசயம் நெறையா இருக்கத்தான் செய்யுது. புதுப் பொண்டாட்டிய வெளிய அழச்சிட்டு போற புரோகிறாம்ஸ்ல கோவில்தான் வெரிகுட் & லோ பட்ஜெட் ஜாய்ஸ்.  அத்தோட நுகரக் கேடில்லாத கலாச்சார நெடி. மற்றபடி பிரையோஜனம் அந்த நிமிட அனுபவம் மட்டும்  தான். வேண்டுதல், நன்மை , பலன் எல்லாம் சிதறு தேங்காய்கள்.

இந்தமாரி சில எடங்கள்ல நம்ம வாய்தான் சும்மாருக்க மாட்டேண்டுது. விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்குள் நுழையும் போது அண்ணன் சொன்னார். இங்கு தான்  ஆழத்து விநாயகர் இருக்கார். முருகனுக்கு அறுபடை வீடுகள் இருக்குற மாதிரி பிள்ளையாருக்கும் ஆறு உண்டு. அதுல இதுவும் ஒண்ணு (சொன்னா சட்டுன்னு கேட்டுக்கணும். ஆராய்ச்சியெல்லாம் பண்ணக்கூடாது. )

 பிள்ளையாரிடம் தான் முதலில் அழைத்துச்சென்றார். ஆலயச் சுவர் முழுக்க நிறைய கிறுக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல இன்ஷியல்கள்/பெயர்கள் / ஹார்டீன்  போன்றவற்றோடு நிறைய எண்களும் இடம்பெற்றிருந்தன.   விளக்கிலிருந்த எண்ணெய்யைத் தொட்டுத் தொட்டு மெனக்கட்டு பூசாரிக்குத் தெரியாமல் எழுதியவை. பிள்ளையாருக்கு சொந்தமான ஆறு வீடுகளில் ஒன்றை காப்பாற்றாத அறநிலையத்துறையின் பொறுப்பற்ற தனத்தை நானிங்கு பேசவரவில்லை.

என்ன நம்பர்ஸ் இதெல்லாம் என நான் கேட்க அண்ணன் சொன்னார், "எக்ஸாம் நம்பர்ங்க பயலுக வேண்டுதல்".
 என் மனைவியும் உண்மையிலேயே இதுகூடத்தெரியாதா என்பது போல் பாவனை காட்டிக்கொண்டாள். எனக்கு கோவில் சவகாசம் ரொம்ப குறைவு. நான் தெரிந்து கொண்டே நடிப்பதாக எடுத்துக்கொண்டாலும் வருத்தமில்லை.

 எப்டி இந்த நம்பர்ஸ்க்கு மட்டும் கடவுள்  ஸ்பெசலா கவனிச்சிருவாரா. . .
இல்ல எங்கள மாரி வாத்தியார்க பிரகாரத்த சுத்தும் போது நம்பர நோட் பண்ணிட்டு போக, கடவுள் அருளால் அந்த பேப்பர் அவர் கைக்கே வந்து விட திருத்தும் போது   மார்க்கை அள்ளி அள்ளி போட்டு விடுவர்கள் போல . .  கிண்டலாக பேசிக்கொண்டே நடந்தோம்.

 அடுத்தடுத்த ஒவ்வொரு பிரகாரத்திலும் பசங்க வளச்சு வளச்சு எழுதிருக்கானுவ.
அதுல ஒரு பய சிவன் சன்னிதிக்குள்ள போயி அவரு பிடனிக்கு பின்னாடியே பொறிச்சுட்டான் . வர்ர போரவங்கெல்லாம் சிவன கும்புடுராங்களோ இல்லையோ இவன் நம்பர கும்புடனும்.

இதை சிரித்துக்கொண்டே கடந்து விட்டாலும். வீட்டுக்கு வந்தபிறகு அந்த எண்கள் என்னை கிளரிக்கொண்டேதான் இருந்தன.

மாணவர்களின்
இந்த மெனக்கடலை சேட்டையாகவோ, குறும்பின் வெளிப்பாடாகவோ எடுத்துக்கொண்டு கடந்து விட முடியாது.

 பொதுத்தேர்வு என்கிற பெரும் பூட்டை திறக்க அவர்கள் பயன்படுத்துகிற ஹேர்பின்களில் இதுவும் ஒண்ணு.  பூட்டிய கதவுக்கு அப்பால் உள்ள உண்மைகளை எண்ணித்தான் வருந்துகிறேன்.

 எதற்கிந்த பாடு ? நியாய அநியாயங்களை அறியாமல், சரி தவறு புரியாமல், கானல் நீரை  நோக்கிய இந்தப்பந்தயம் எப்போது முடியும்?

ரிசல்ட் வெளியிட்டதும் நடக்கும் பெருங்கூச்சல்; தனியார் பள்ளிகளின் அட்டூழியங்கள், பேட்டிகள்,  வரிசைப்படுத்துதல், விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகள், இவற்றையெல்லாம் போன வருசம் பார்த்த பயத்தோடு இந்தாண்டு களத்தில் போட்டிக்கு நிற்கிறார்கள்.

எல்லாரும் கவனிக்கிறார்களே என்கிற கவலையில் ஒரிஜினல் திறனை ஒளித்து வைத்துவிட்டு அவனுள் இல்லாத ஒன்றை தோண்டித் தோண்டி முடிந்தளவு எடுத்து மதிப்பெண்களாக தருகிறான். தேர்வுகாலங்களில் மதிப்பெண் என்கிற ஒரே அளவுகோலை வைத்து அவனது ஒரிஜினலை அடித்து நொறுக்குகிறோம்.

பொதுத்தேர்வை மையப்படுத்தி நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் இரைச்சலை காது கிழிய கடந்து கொண்டிருக்கிறார்கள் நம்பிள்ளைகள்.  இந்தப் பாவத்தையெல்லாம் தனக்கான எண்களையிட்டு கோவில் சுவற்றில் பதிவு செய்து வைத்திருப்பதாய் நினைத்துக் கொள்கிறேன்.

கருப்புநிறத்தில்  தேர்வு எண்களாய் நிற்கும் எண்ணைப்பிசுக்கு இந்த கோவில்சுவர்களில் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ கோவிற்சுவர்களிலும் இருக்கலாம். . .

கழுவி சுத்தம் செய்ய வேண்டிய பிசுபிசுப்பு
சுவர்களில் மட்டுமல்ல . . .

-சக.முத்துக்கண்ணன்.

Comments

Popular Posts