பாடத்திட்டங்களைத் தாண்டி. . .

 - சக.முத்துக்கண்ணன்.

 


இந்த கட்டுரையை எழுதும் போது மட்டும் ஒரு மாணவனாக மாறிக்கொள்கிறேன்

எட்டாம் வகுப்புக்கு போன புதிதில் தமிழுக்கு வெள்ளைத் தமிழைய்யா வரப்போறார் என்றதும் சந்தோசத்துல துள்ளிக்குதிச்சோம்.

" டேய் வெள்ளத்தமிழய்யா நல்ல அய்யாடா; அடிக்கவே மாட்டார்றா" மூத்தமாணவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் (அவரோட சட்டை, பேண்ட், முடி, கர்ச்சிப் உட்பட எல்லாம் வெள்ளை. அதனால் இந்த பட்டபேர்.)

அவர் அடிக்கவே மாட்டார்; நாங்க படிக்கவே மாட்டோம்.  எப்போவாவது ஒரு முழ நீளத்தில் குச்சி எடுத்து வருவார். வருசம் பூராம்  அது தேய்மானமற்றுக் கிடக்கும்.

 எல்லா வாத்தியாரும் அடிக்கிற ஸ்கூல்ல இப்டி ஒருத்தர் சிக்குனா விடுவோமா. .  ஒரே என்ஜாய்மெண்ட்தான்.  இத்தன நாள் வாங்குன அடிக்கெல்லாம் ஒரு பலன் கெடச்ச மாதிரி இருந்தது.  நிறைய மிஸ் யூஸ் பண்றதும் நடந்தது.  இரண்டாம் இடைப்பருவத்தேர்வில் நான் தமிழில் பெயில். கணக்கில் நூத்துக்கு நூறு. எம்புட்டு அசால்ட்டா/ எப்டி என்ஜாய் பண்ணிருக்கேன்னு  பாருங்க. நாமட்டுமில்லை வகுப்பில் பாதிக்குமேல் தமிழ்ல பெயில். அதுல 11பேர் கணக்குல நூத்துக்கு நூறு.  ஏழாப்புத் தமிழய்யா வந்து வெளுத்து விட்டு போனார். அப்புறம் இரவெல்லாம் யோசித்துவிட்டு திருந்தி விட்டோம்.

உண்டான சந்தோசம் வெள்ளத் தமிழய்யா கெடச்சதுல மட்டும் இல்ல.  அடி வெளுத்தெடுக்கும் ஏழாம் வகுப்பு தமிழய்யாட்டருந்து தப்பிசதுல இருக்கு.

தப்பித்து வாழ்தல் ரொம்ப முக்கியம்.

விலங்குகளுக்கு தொழில் ரெண்டு.

1.இரை தேடுவது

2.தப்பித்து வாழ்வது

எங்களுக்கும் அதுதான். முதலாவது வீட்டில் நிகழும்;அப்பாம்மா பாத்துப்பாங்க. இரண்டாவது பள்ளியில் நிகழும்; நம்மதான் பார்த்துக்கணும்.

வீட்டுப்பாடம் செய்யாத காலைப் பொழுதில் சாமி கும்பிடாம ஸ்கூலுக்கு போறதில்லை.  "கருப்பசாமி. . . .  பள்ளியோடத்தில அடிவாங்காம  காப்பாத்திருய்யா. . ."
 (நல்லா யோசிச்சுப் பாருங்க நம்ம லீவு நாள்ல சாமி கும்பிட்ருக்க மாட்டோம் )

அடி வாங்குறதுலேர்ந்து தப்பிக்கிறதுன்னா சும்மாவா. .

அமரேசன் சார் அடிக்கு பயந்து பேண்ட்டுக்குள் மூணு டவுசர் போட்டுபோவேன். தட்டிப் பார்த்து. டவுசரை கழட்டுவார். . . டமார். . டமார். . . . சவுண்டுல பக்கத்து கிளாஸ் சைலண்ட் ஆகிடும்.

நாகராஜ் அடி வாங்கினால் வகுப்பே குலுங்கி குலுங்கி சிரிக்கும். தாங்க முடியாமல் டிக்கியை தேய்த்துக்கொண்டே தவ்வுவான். ண்டில கொப்புளம் சார் என்றாலும் விட மாட்டார்.

 இப்படி விடமாட்டாதவர்களை பற்றி விளாவாரியாக எழுதினால், பல கொப்புளங்கள் உடையும். நம்ம தொழில் வீச்சமெடுத்துப்போகும் என்பதால் விட்டு விடுகிறேன்.

படிக்காதவனை அழைத்து  எல்லார் முன்னிலையிலும் தனியே நிறுத்தி,கேள்வி கேட்டு,அவனது அவமானத்தை முழுசா காட்சிப்படுத்தி, ஒருவன் தலைகுனிவிற்காக ஆசிரியர் அமைத்து தருகிற மேடை;
உடலை விடுத்து மனதை ஊனப்படுத்துகிற  அந்த உளவியல்;
அவர்கள் கண்டுபிடித்து வைத்திருந்த டீச்சிங் எய்ட்ஸ் போலும்.

வேற வழியில்லாம புரியாதையும் படிக்க ஆரம்பிச்சேன்.

தண்டனைக்குப் பயந்து செய்து கொண்ட மனப்பாடங்கள் இப்போது எனக்கு நினைவிலில்லை.

கற்றலில் பின்தங்கிய குழந்தைகளைக் குறிப்பிட  தற்போது  'மெல்ல மலரும் குழந்தைகள் ' எனும் சொற்களையே பயன்படுத்த சொல்கிறார்கள். நம்ம காலத்தில் என்ன மாதிரி  பயன்படுத்தியிருப்பார்கள்?
ஆனால் எப்போதும் நடைமுறையில் 'முட்டாப்பயலுவ' தானே!

மெல்ல மலரும் குழந்தைகள்  விடுகிற சாபம் பளிக்கும் என்கிற மூடநம்பிக்கையை நான் இப்போதும்
பரப்பிவிடுவதுண்டு.

சரி என் வகுப்பில் சீக்கிரம் மலர்ந்த குழந்தைகள் என்ன ஆனார்கள். . ?

இன்ஜினீயர்/  பிரைவேட் கம்பெனி / வியாபாரம் /
ஏதோ கவர்மெண்ட் வேலை /
அப்பா தொழில் /  ஆசிரியர் / கந்துவட்டி /
ஆசிரியர் பணியுடன் கூடிய கந்துவட்டி / கொஞ்சமாய் விவசாயம்  அல்லது இன்னும் வேலை தேடிக்கொண்டு. . . .

எந்த வாத்தியாரும் கணித்திருக்கவே முடியாத பல்வேறுபட்ட மட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சத்தியமாய் இந்த விளைச்சலுக்கு  வகுப்பறை உரம் தரவில்லை.
இந்த விசயத்தில் அப்துல் கலாம் போன்றோரின் மிகைச்சொல்லாடல்கள் பொன் மொழிகளாக நிற்பவை.
நிஜத்தில் கவரிங்.
லட்சத்தில் ஒருவரை விட்டு விட்டு மிட்சங்களை பார்கணும்.

குடும்ப பிண்ணனி, படித்த பெற்றோர்களின் வழிகாட்டல், உறவுகளின் சிபாரிசு, நடுத்தரவர்க்க போராட்டங்கள், பணம், சிக்கல், பிரச்சனை, தாய் தகப்பன் மரணம் என எழுதி தீர்க்க முடியாத ஆயிரமாயிரம் காரணங்களால் உந்தித்தள்ளப்பட்டு நிகழ்காலத்தில் நிற்கிறோம்

அந்த இரண்டாம் இடைப்பருவத்தேர்வில் தமிழில் பாஸானவர்களில் சிலருக்கு
சென்னை, பெங்களூரில் ஜாப் .

 நகரவாழ்கைக்குபோன நண்பர்களுக்கு நான் வாட்ஸ்அப்பில் எழுதும்  தமிழ் கூட வியப்பாய் இருக்கு. "எப்டிடா. . .  தமிழ்ல போய் கமெண்ட் போடுற!!" ( வெறும் வாழ்த்துகள் என்றுதான் போட்ருப்பேன்) அவர்களுக்கு ஆங்கிலம் தான் தற்போது முதல் மொழி.  தேவையை நோக்கி போகிற போது காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடும்.

இந்த தலைகீழ் மாற்றங்களை, எதிர்காலப் புதிர்களை,  இந்த புழுத்துப்போன கல்விமுறையை மனதில் வைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழையும் போது *பாடத்திட்டங்களைத் தாண்டி* ஏதாவது புது  முயற்சியெடுக்கத் தோணும் அப்படியான முயற்தான்
*வாங்க பேசலாம் .*

சிறப்பு விருந்தினர்:
ராமலிங்கய்யா.  .

எங்கள் பள்ளியில்  மாணவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

 "டேய் ராமலிங்கய்யா நல்ல அய்யாடா; அடிக்கவே மாட்டார்றா"


(தொடரும். . . )

-சக. முத்துக்கண்ணன்
அரசு மேல்நிலைப் பள்ளி. விக்கிரமங்கலம். அரியலூர் மாவட்டம்.

Comments

Post a Comment

Popular Posts