பீகாருக்கு போலாமா சார்..

பீகாருக்கு போலாமா சார்..

-சக.முத்துக்கண்ணன்.விக்கிரமங்கலம்
**********************************

பள்ளி என்கிற அமைப்பு உருவான காலத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாய்
ஒழுங்கு எனும் பெயரில் அடிப்படை நோக்கங்களை விடுத்து நிரூபிக்கப்
பட்டவைகளை ஏட்டில் வைத்துக்கொண்டு  சுவர்களுக்குள் அடைபடுதலே இன்றைக்கும் கற்றல் நடைமுறை.

1960 களில் தான் ஆஸ்திரிய கல்வியாளர் இவான்இலிச்  பள்ளிக்கூட கட்டிடங்களைத்தாண்டி திறந்த வெளிக்கு மாணவர்கள் நகர்த்த பெரிதும்
முயற்சியெடுத்திருக்கிறார்.

இன்னும் இது மாதிரியானவைகள் கல்வி வரலாற்றில் சின்ன சின்ன முத்திரைகளாக இடம் பெருகிறதே அன்றி வளர்த்தெடுத்தப் பாடில்லை.

பயிர்பெருக்கம்  தொடர்பான ஒரு பாடத்தை பயிர் செய்யும் இடத்திலேயே  வைத்து நடத்த ஆசை.
அச்சடித்த எழுத்துகளை வைத்துக்கொண்டு பேசினால் அரிசி வந்து விடாது. வாயில் நீர்ஊர மென்று திண்ணும் வெந்த பருக்கைகளுக்காக நொந்தவர்களை களத்திற்கு சென்றால் தானே காண முடியும்.
கற்றலை காகிதத்திலிருந்து கடத்தி வந்து களத்துமேட்டில் வைக்க வேண்டிய கனவுகளை எல்லாம் சம்பளக்கமிஷன் நேரத்தில் பேசாமல்... மூடிக்கொண்டு  விஷயத்திற்கு வருகிறேன்.

இந்த வாரம் *அஞ்சல் வாரம்.*
(அக் 9 - 14 )

"போஸ்ட் ஆபீஸ்லயே போய் உக்கார்ந்து போஸ்ட் ஆபீஸ் பத்தி உங்களுக்கு செல்லித் தரணும்னு ஆசை டா."

சொல்லி விட்டு வந்ததை விடாமல் பிடித்துக் கொண்டார்கள். இப்ப இருக்குற 6th பயலுக ரொம்ப வெடுசு. பிடிச்சா லேசுல விடமாட்டானுக. உடும்பு பிடியா பிடிச்சு கிட்டானுக. இவான் இலிச் பத்தி எல்லாம் பேசுறோம் இது கூட செய்யலாட்டி எப்டி.

அழைத்து செல்ல முடிவெடுத்தேன். அஞ்சல் அலுவலரிடமும் பேசிட்டேன். இப்ப இருக்கிற தலைமைஆசிரியர் இதை ஆதரிப்பார் என தெரியும். கேட்டதும் உடனே ஓகே சொன்னார். வரிசைக்கட்டி கிளம்பிட்டோம்.
பள்ளியில் இருந்து அஞ்சலகம் வரை அவர்களிடம் இருந்த அமைதி, ஒழுங்கு ஆச்சரியமாக இருந்தது (ஒரு வேளை அப்பதான் நாள பின்ன கூட்டிட்டு போவான்னு முடிவெடுத்திருப்பாய்ங்கெளோ!).
உள்ளே போனதும் ஐம்பது பைசா போஸ்ட் கார்டு அனைவருக்கும் வாங்கிக் கொடுத்தேன். ஆளுக்கொரு கடிதம் எழுதினார்கள். சிலர் தலைமைஆசிரியருக்கு, சிலர் பிடித்த ஆசிரியர்களுக்கு, சிலர் வீட்டுக்கு. .

அனுப்புநர் ,பெறுநர் முகவரிக்கான இடங்கள், பின்கோடு போன்றவற்றை சொல்லிக் கொடுத்தேன்.
பின்பக்கத்தில் என்ன எழுத வேண்டும் என்பதை அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விட்டேன். பத்து நிமிடம் அமைதியாக எழுதிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சம்பவங்களை எல்லாம் ஒரு ஹிந்தி காரர் வளைத்து வளைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் தான் ரஞ்சன்.! எங்கள் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கிடைத்த புது ஃப்ரண்டு. பீகாரில் இருந்துவந்து அம்பாபூர் அஞ்சலகத்தில் அஞ்சல் உதவியாளராக பணி  செய்கிறார். (தேனியிலிருந்து வந்த நான் எவ்வளவோ தேவலை. ட்ரான்ஸ்பர் ட்ரைபண்ணலியா சார் என வாயெடுத்தேன். அவர் பாட்டுக்கு இந்தியில் திட்டிவிடுவாரோ என பயமாக இருந்தது. விட்டுவிட்டேன்)

அவருக்கு தமிழ் வராது எனக்கு  ஹிந்தி வராது இரண்டு பேருக்கும் இங்கீலிஸ் இழுபறி. அவர் எது பேசினாலும்  மாணவர்களுக்கு சிரிப்பு சிரிப்பாக இருந்தது. இந்த இரண்டரை ஆண்டுகளில் அவர் பயின்று வைத்திருந்த தழிழை அவர் மொழிய மொழிய நான் ரசித்தேன். பீகாரில் தமிழை  கட்டாய பாடமாக; தமிழ்நாட்டில் இந்தியை கட்டாயப்பாடமாக வைக்காததால் உருக்கொண்டிருக்கிற நேசமிது. அந்நியம் ஈர்க்கும். இருவரும் அவரவர் அடையாளங்களோடு நெருங்கினோம்.

துணை அஞ்சல் அலுவலர் சுரேஷ் அவர்கள் வந்ததும் மாணவர்கள் கவனிக்கத் தொடங்கினர். தபால்தலை சேகரிப்பு ,சிறு சேமிப்பு,பதிவுத் தபால்.,விரைவுத் தபால்,மணியாடர் என ரொம்பவே பிரையோஜனமாக  பேசினார்.  இடையில் ரஞ்சனைக் கவனித்தேன் அவர் யாரிடமோ வீடியோ சார்டிங்கில் இருந்தார். அவ்வப்போது கேமராவை மாணவர்கள்  பக்கம் திருப்பி் ஏதோ அந்த பக்கம் இந்தியில் சொல்லிக் கொண்டிருந்தார். அனேகமாக மாணவர்கள் போஸ்ட் ஆபீஸ்க்கு விசிட்டிங் வந்ததை தான் யாருக்கோ போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார். நான் பள்ளிக் கூடத்தை விட்டு மாணவர்களை போஸ்ட் ஆபீஸ்க்குத் தான் அழைத்து வந்தேன். ரஞ்சன் அவர்களை  பீகாருக்கே அழைத்து சென்று விட்டார்.

கீழிறங்கி வந்து  ஒவ்வொருவராய்  எழுதியதை தபால் பெட்டியில் போடும் போது தான் அலுவலர் கேட்டார்.  "இதுக்கு முன்ன லெட்டர் போட்ருக்கீங்களா?"
"சின்ன ஸ்கூல்ல படிக்கும் போது பேப்பர்ல எழுதி எழுதி மடிச்சு இந்தப் பொட்டிக்குள்ள போடுவோம் சார்" என சில பயலுக கோரஸாக ஒலரிட்டாய்ங்க.
ஓ. . அதெல்லலாம் நீங்க தானா என்றார். நிறைய பாதிக்கப்பட்டிருப்பார் போல.
இப்ப ஒன்னுஞ் செய்ய முடியாது. சிரித்துக்கொண்டார்.

வண்ணதாசன் எழுதிய வார்த்தைகள்  ஞாபகத்திற்கு வந்தது. அவர் வீட்டு அஞ்சல் பெட்டிக்கு தபால் வருவதே இல்லை. இருந்தும் ஆசையில் தினசரி திறந்து பார்ப்பார். ஒரு நாள்  பார்க்கையில்  இறகு கிடக்கும். "எந்தப் பறவை எழுதியிருக்க கூடும் இந்த கடிதத்தை" என்பார்.

தபால் பெட்டி எட்டாத சில மாணவர்களை அலாக்காக தூக்கினேன். எங்களது அஞ்சல் முயற்சி ரஞ்சன் எடுத்த செல்பியில் புன்னகையோடு புகைப்படமானது.!!

வகுப்பறைக்குள் வந்ததும் ஒரு மாணவன் கேட்டான்
" சார் அடுத்து எங்க சார் போறோம்.. ? "

இன்னொரு மாணவன் சொல்லிக்கொண்டிருந்தான் . .

" டேய் பீகாருக்குடா.  . "

நான் திரும்பிபார்க்காமல்  வந்துவிட்டேன்.

அன்புடன்
சக.முத்துக்கண்ணன்.




Comments

Popular Posts