புதிய வாழ்வியல் மாத இதழில் நான் எழுதும் தொடர் இது.
**


சிலேட்டுக் குச்சி -1:
*********************
-சக.முத்துக்கண்ணன்.

சிலேட்டு எந்த ஆண்டு கண்டறியப்பட்டது? யார் கண்டுபிடித்தது?  அதன் வரலாறு என்ன? என்பது போன்ற தகவல்களைத் தரும் கட்டுரைகளாக இத்தொடர் அமையப்போவதில்லை. அதற்கெல்லாம் கூகுளே போதும். மூளையைப் புள்ளிவிபரங்களால் இட்டு நிரப்பாமல் இதயம் நனைக்கிற ஏற்பாடு  இந்த 'சிலேட்டு குச்சி'.

ஒரு அப்பா தன் பிள்ளைகளுக்கு, எட்டும் மட்டும் பறித்துத் தருகிற கொய்யாக்கனிகள் மாதிரி நான் ஓர் ஆசிரியனாக நின்று அனுபவங்களைப் பகிரப்போகிறேன்.

மறுநாள் காலையில் அழிந்துவிடக் கூடாதென்பதற்காக,
குச்சியை எடுத்து அதன்நுனியை வாயிலூறும்
எச்சிலில் நனைத்து சிலேட்டில் வீட்டுப்பாடம் எழுதிய அதே கையில் தான் சாக்பீஸ் பிடித்திருக்கிறேன். அந்த குச்சியின் நுனி ஈரம் முக்கியமானது. இந்தக் கட்டுரைகளிலும் அது காயாமலிருக்கும்.

கிராமத்தில் இப்படிச் சொல்லிக்கொள்வார்கள்.
"கொஞ்சமாச்சும் நெஞ்சுல ஈரமிருந்தா இப்டி பேசிருப்பானா? இப்டி செஞ்சிருப்பானா?" என்பார்கள்.

ஈரம் தான் செடிகளை முளைக்க வைக்கும்; குழந்தைகளையும் தான்.

நீரைத் தேடி ஓடும் வேரைப்போல தன்னை ஒத்த  மனவயது கொண்ட ஆசிரியர்களை, பெற்றோர்களைத் தேடி அலைகிறார்கள் குழந்தைகள்.

பள்ளி என்பது குழந்தைகளுக்கான உலகம். இதனுள் நம் அறிவைவிட அக்கறையே காலம் கடந்து கொண்டாடப்படுகிறது.

ஒரு குழந்தையின் கண்கொண்டு இந்த பள்ளியுலகை நித்தமும் படம்பிடித்து வாழ்கிற வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கிறது. இது ஒரு வகையில்  கொடுப்பினை.வெற்றிகளையும் தோல்விகளையும் செரித்து விட்டு அனுபவங்களை மட்டுமே மிச்சம் வைத்து நிற்கும் பள்ளிகளில்...
அதன் கசப்பும் இனிப்புமான பல தருணங்களை அப்படியே பச்சை வாசத்தோடு சொல்லிக் காட்டப்போகிறேன். சில எனக்கும்,  பல என் சகாக்களுக்கும் நேர்ந்தவை.

இவைகள் உங்களுக்கு அருகாமையிலும் நேர்ந்திருக்கலாம். 'அட ஆமால்ல...' சொல்ல வைக்கலாம்.

அந்த அப்பாவி 'வாத்தி' தெருவில் நடந்துவரும் போது,  என்றுமில்லாமல் உங்களை எழுந்து நிற்க வைக்கலாம்.
எதிரி வீட்டுக் குழந்தைகளையும்,  நீங்களே கூப்பிட்டு தலைவருடிக் கொடுக்கலாம். சிறுநீர்கழித்து விட்டு படுக்கைக்கு வரும் நள்ளிரவில் அசந்து  தூங்கும் மகனது நெற்றியில் ஒரு முத்தம் கொடுக்கச் சொல்லித்தரலாம்.

ஒரு பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து  கேள்வி கேட்க வைக்கலாம்.
அடிக்கப் பயன்படுத்தவே முடியாத காந்தியின் கைத்தடியை உங்களிடம் தந்து விட்டுப்போகலாம்.

பள்ளிக்கூடம்- அது பிறந்த காலத்திலிருந்தே விமர்சனங்களை வாங்கி வளர்ந்து வந்த ஸ்தாபனம். குழந்தைகளை அதன் நிறைகுறைகளோடு ஏற்கும் மய்யம். ஆசிரியர்களையும் அப்படியே.
#
''என்னடா மொட்ட போட்ருக்க?'' என அருளைக் கூப்பிட்டு தலையைத் தடவிய போது அவன் அழத் தொடங்கியிருந்தான். அப்பா செத்துப்போன வலி.  பிற்பாடு விசாரித்ததில் இன்னும் வலித்தது. குடி போதையிலிருந்த கணவனைத் தொந்தரவு தாங்காமல் மனைவியே கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறாள். இரவெல்லாம் இரத்தக் கவுச்சியில் அம்மாவின் புடவையைப் பிடித்துக்கொண்டு  நின்றிருந்த ஏழாம் வகுப்பு பையனை மறுநாள் பள்ளிக்கூடம் வழக்கம் போல உட்கிரகிக்க முடியுமா.? செய்தித் தாளில் இது போன்ற கொடூரங்களைப் படிக்கும்போதெல்லாம் நெஞ்சு இதை எண்ணித்தான் பதைக்கிறது. அந்த வீட்டுக் குழந்தைகள் அதற்கடுத்தமுறை    பள்ளி நுழையும் போது அன்றைய நாள் முதல் பீரியட் எப்படி நகரும்?

அதற்கடுத்த வாரம்
அந்த அருளின் பெயருக்கு நேராக சிவப்பு மையில் கோடிழுத்தது இந்திய கல்வியின் மீதான தழும்பல்லவா?

இவைகளும் சேர்ந்ததே நம் பள்ளிப் பயணம். காயங்களை மறைத்துவிட்டு 'நாங்கெல்லாம் அப்டியாக்கும்' என சப்பைக்கட்டு கட்டாமல் உள்ளதைச் சரிசெய்ய தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது. அதற்காக விசனங்களை மட்டுமே கொணரப்போவதுமில்லை. சந்தோஷங்களை, கொண்டாட்டங்களை, குறும்புகளை, நம்மைத் திணற வைத்த கேள்விகளை, அடங்காத சேட்டைகளை, வீட்டுக்குள்ளிருக்கும் பள்ளிக்கூடத்தை, பள்ளியிலிருக்கும் வீட்டை என  இந்தச் சிலேட்டுக்குச்சி நீண்டு எழுதும்.

கறுப்பும் வெள்ளையுமான இரண்டு உலகங்களைக் கொண்ட பள்ளி, எண்ணிலடங்கா அனுபவங்களை நிறைத்துக் கொண்டு நிற்கிறது.
#
மகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்துவிட்டு,  தெருமுனை வரை போனவர், வேலைக்குப் போக மனசில்லாமல் மறுபடியும் வந்து மகள் அழுகிறாளா? என  எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அப்பாவின் முகத்தை......

"சாம்பார் ஊத்தட்டுமாசார்.. சட்னி வைக்கட்டுமா சார்.." என ஒன்பதாம்  வகுப்பில் இடைநின்ற மாணவன், ஓட்டலில் அவங்க சாரை பார்த்துக் கேட்கும் போது....
நூறு ரூபாய் சம்பளத்தில் பழைய பனியனும், அழுக்கு லுங்கியுமாக வேர்வை சொட்டும் முகத்தோடு அவங்க வாத்தியாரை ஓடி ஓடிக் கவனிக்கும் போது...அவர் சொல்லித் தந்த போயம், எஸ்ஸேயெல்லாம் சாம்பாராகவும், சட்டினியாகவும் கோரஸ்ஸாக திரும்பத் திரும்ப ஒலித்திருக்காது!!!  அதே ஊரில் உள்ள அந்த ஓட்டலை நித்தமும் கடந்து போகும் அந்த இங்லீஸ் வாத்தியாரின் மனநிலையை...

"இவன அடிச்சு நொறுக்குங்க சார். ஒரு ஒழுக்கத்துக்கு வரட்டும்" என காட்டமாய் சொல்லி விட்டுப் போன அதே அப்பா.. அவன் புரண்டு படுக்கும் போது தொடையிலிருந்த தடிப்பிற்கு எண்ணெய் தடவியதை அழுது கொண்டே என்னிடம் சொன்ன தினேஷை.....

தான் குனிந்து நின்றுகொண்டு அஞ்சாப்புப் பசங்களை
பச்சைக் குதிரை தாவச் சொல்லி விளையாடிக் கொண்டிருக்கும் துவக்கப்பள்ளி ஆசிரியரை...

லஞ்ச் பாக்ஸை திறந்ததும் கீழே வைக்கும் அதன்மூடியில் ஆளுக்கொரு கையென நண்பர்கள் தன்  வீட்டுச்சோற்றை பகிர்ந்து வைத்ததும் நிரம்புகிற அந்த சாதியற்ற மூடியை....
என அனுபவங்களில் ஈரம் குழப்பி உங்கள் உள்ளங்களில் பூசப்போகிறேன்.

மீண்டும் பள்ளிக்கூடத்துக்குப் போய் கொஞ்ச நேரம் அப்படியே அந்த மரத்தடி நிழலில்.... அந்த வகுப்பறைப் பெஞ்சில்  உட்கார்ந்து கொண்டால் எப்படி இருக்கும்? அப்படியான ஓர் இளைப்பாறலை இந்தக் கட்டுரைகள் மாதாமாதம் தந்துவிட்டுப் போகும்.

(எழுதலாம்)

புதியவாழ்வியல் இதழில்...

Comments

  1. நெஞ்சைத்தொடும் பதிவு...

    ReplyDelete

Post a Comment

Popular Posts