சிலேட்டுக்குச்சி தொடர் -6

எங்க சார் தான் ஹீரோ:
*****************************
-சக.முத்துக்கண்ணன்

பன்னீர்சார் தான் என்னோட ரோல் மாடல். அவரை ஆறாம் வகுப்பில் பார்த்த போதே நானும் இப்படியொரு வாத்தியாராகனும் என ஆசைப்பட்டிருந்தேன். அவர்
தோற்றமே பிடித்திருந்தது. ஒல்லியான தேகம், சின்ன மீசை அப்டியே ஒரு பன்னண்டாப்பு அண்ணன்  வகுப்பெடுக்க வந்தது போல இருந்தது.  முழு மனிதனுக்கான தோற்றமே குழந்தைகளைப் பயமுறுத்திவிடுவதாக ஊகிக்கிறேன்.  சின்னப்பையன் போன்றதொரு தோற்றம்தான்,  முதலில் நம்மை புரிந்து கொள்வார் என நம்ப வைக்கிறது. பன்னீர் சார் இருபது வயதில்  வேலைக்கு வந்திருந்தார். அவரோட முதல் செட் நாங்க தான். வந்த ரெண்டாவது நாள் வகுப்புக்கு கித்தார் எடுத்து வந்திருந்தார். அதை இசைத்த படியே ஒரு பாட்டு பாடினார். அது ஒரு இங்கிலீஸ் பாட்டு. ஒண்ணுமே புரியவில்லை. இருந்தாலும் பிடித்திருந்தது. பாடப் பாட நாங்களும் பாடினோம் . ரெண்டாவது நாள் நாங்களாகவே பாடிப் பழகியிருந்தோம். மூன்றாவது நாள்  இங்கிலீஸ் புக்கை அவர் திறக்கச் சொல்லும் போது தான் தெரியும்  'தி சோல்ஜர்ஸ்' எனும் போயம் அது. அதன் பிறகு அந்த போயத்தை நடத்தத் தொடங்கினார். இன்னும் எனக்கு அந்த பாட்டு நினைவிருக்கு. மனப்பாடம், ஸ்பெல்லிங்கெல்லாம் கிடக்கட்டும்,  வகுப்பில் 64 வது ரேங்க் எடுத்த பையனுக்கும் அந்த போயத்தை கொண்டு சேர்த்திருந்தார்.

அந்த 64 வது ரேங்க்தான் எங்க கிளாஸ்ல கடைசி ரேங்க்.  அவன் பேர் அன்சாரி.
தனியாக அன்சாரியைப் பாடச்சொல்லி தமிழய்யா வகுப்பையே கலகலப்பாக்குவார். அவன் பன்னீர் சார் போல .....ம்ம்ம்ம் என இழுக்கும்போதே நாங்க சிரிக்க ஆரம்பிச்சிடுவோம்.
எல்லா வாத்தியாரும் ஜோக்கடிக்க அவனைப் பயன்படுத்தினார்கள். அவன்
கையெழுத்து கண்றாவியாக இருக்கும். ஒருமுறை தமிழய்யா அவனை அடித்து வலதுகை விரல் வீங்கி ரத்தம் கட்டிவிட்டது. அவன் மட்டுமென்ன.....  எழுத்துப் பயிற்சி நோட்டையே கிழித்து அழுக்காக்கி வைத்திருப்பான். அவன் பையிலிருந்து புத்தகங்களை எடுத்துவிட்டு   கீழே கவிழ்த்தால்  கிழிந்து சுருண்ட காகித குப்பைகள் குவியும். அவனிடம் தன்சுத்தமும் கிடையாது. எல்லா சாரும் அவனை வெளுத்தெடுப்பார்கள்.

ஒரு நாள் பன்னீர் சார் கை நிறைய கலர் சாக்பீஸ்கள் கொண்டுவந்திருந்தார்.  அவர் உள்ளே நுழையும் போதே அன்சாரி முட்டி போட்டிருந்தான். அவனிடம் அதைக் கொடுத்துவிட்டு ஒரு கலரை மட்டும் எடுத்துக்கொண்டு  கரும்பலகையில் எழுதத்தொடங்கினார்.  அவர் கையெழுத்து அவ்வளவு  அழகாக  இருக்கும். பார்க்கப் பார்க்க ஆசை கொள்ளும். அவர் எழுதிவிட்டுப் போன கரும்பலகையை அழிப்பது கிட்டத்தட்ட கொலைக்குச் சமம். அந்த அற்புதத்தை அடுத்த பாடவேளையாசிரியர்கள் டஸ்டர் எடுத்து வதம் செய்தார்கள்.  மேசை இருந்தும் சாக்பீஸை அங்கு வைக்க மாட்டார்.  ஒவ்வொரு சாக்பீஸையும் அன்சாரியின் கையிலிருந்து எடுத்தார்.
வகுப்பு முடிந்து போகும் போது மீத சாக்பீஸை அவனிடமே வச்சிருக்கச் சொல்லிட்டார். அவன் பாக்ஸ் டப்பாவை பல்லில் கடித்துத் திறந்து பென்சில், ஸ்கேல், ரப்பர், காசையெல்லாம் பையில் கொட்டிவிட்டு அதில் சாக்பீஸை அடுக்கி வைத்திருந்தான். அவ்வப்போது அவர் கேட்டால் எடுத்துக்கொடுப்பான். பெரும்பாலும் இந்த மாதிரி பொறுப்பை நல்லா படிக்கிற பசங்ககிட்டத்தான் கொடுப்பாங்க. இவர் வித்தியாசமாக இருந்தார்.  பன்னீர்சார் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும். அதை ஆராயாமல் அப்படியே ஏற்கப் பழகியிருந்தோம். இந்த விசயத்தின் மூலம் அன்சாரியை  அவர் ஆறுதலாய் தட்டிக்கொடுப்பதாகத் தெரிந்தது. வகுப்பறையில் அவனுக்கு கிடைத்த முதல் கௌரவம் இது. அவர் சத்தமாக பேசிக்கொண்டே கலரை மாற்றி எடுக்க வரும் போது அன்சாரி ரெண்டு கையையும் ஏந்தி நீட்டுவான். காலப்போக்கில், அடுத்து அவர் எந்த கலரை  எடுப்பார் என அவனால் ஊகிக்கமுடிந்தது. சில நேரங்களில்  அவனே எடுத்து கொடுக்கவும் செய்தான். அவர் சிரித்தபடி வாங்கிப் போவார். 
   
'போலச் செய்தல்' எல்லாப்பருவத்திலும் நிகழும். எங்களுக்கு அந்தப் பருவத்தில், அதிலும் அவர் விசயங்களில் அதிகமாக நிகழ்ந்தது. அவர் போல பலவற்றைச் செய்தோம். குறிப்பாக சிலர் அவரைப் போல தலைசீவ ஆரம்பித்தனர்.  கையெழுத்தும் அவர் போல வர வேண்டுமென எழுதி எழுதிப் பழகி கிட்டத்தட்ட பலர் அழகாக எழுதத் தொடங்கினார்கள். ஆங்கில எழுத்தில் கேப்பிட்டல்  A எழுதும்போது கீழிருந்து மேலாக இழுத்து பின் கீழிறக்கி கையை எடுக்காமலே குறுக்காக கோடிழுத்து அவரைப்போலவே A போட்டுப் பழகியிருந்தோம்.

சனிக்கிழமை ஸ்பெசல் கிளாஸ் வைப்பார். எல்லாரும் கலர் ட்ரெஸில் வந்திருப்போம். அந்த கலர்கலரான சட்டைகளே வகுப்பறைக் கட்டுப்பாட்டை உடைத்தது. (சீருடை அவசியம் குறித்து தனியாகப் பேசுகிறேன்.) அவர் பள்ளி நாட்களைப் போலவே அன்றும் சொல்லித் தந்தாலும் ஏதோ ஒரு சுதந்திரத்தை உணர்ந்தோம். அவர் விடுமுறை தினங்களில்தான் எங்களைக் கூடுதலாக நெருங்கினார். காலை முழுதும் படித்து விட்டு மதியம் அவரோடு கிரிக்கெட் விளையாடினோம். சார் என்பதால் அவுட் 
ஆனாலும்  நோ பால் சொல்லிவிட்டு பால் போடுவோம். பன்னீர்சார் சிக்ஸ் அடிச்சாத்தான் பவுலருக்கு குசி. அவர் சந்தோசம் தான் மாணவர்களுக்கு சந்தோசம். இது பயம் அல்ல கைம்மாறு.

விளையாடிக் கொண்டிருக்கும் போதே ஒருத்தன் ஓடி வந்து, "சார்..சார்... அன்சாரி சார் போர்டுல கிறுக்கி வச்சுட்டான் சார்" என போட்டுக் கொடுத்தான். விளையாடி முடிச்சதும், சாருக்கு முன்பாக நாங்கள்  ஓடிப் போய் பார்த்தோம். அவன் பெஞ்சை இழுத்துப் போட்டு மேலேறி கலர் சாக்பீஸால் ஏதேதோ எழுதி இருந்தான். அவனது கையெழுத்து  மோசமாக இருந்தும் கரும்பலகையில் ஏதோ ஒரு ஒழுங்கு இருப்பதாக எனக்குப்பட்டது. பன்னீர் சார் நுழைந்ததும் அவனைக் கண்டித்து விட்டு அப்புறம் சொன்னார். "இதுல பாத்திங்ளாடா நான்  எந்த கலர்ல தலைப்பு எழுதுவனோ அதே கலர்ல தலைப்பெழுதிருக்கான்,  மத்ததுக்கு எந்த கலர்ல எழுதுவனோ அந்த கலர்ல எழுதிருக்கான். கோடெந்த கலர்ல போடுவனோ அந்த கலர்ல போட்ருக்கான்" என சொன்னபிறகு தான் அதிலிருந்த ஒழுங்கு புரிந்தது. அன்று தான் அவனுக்கு தண்டனையாக ஒரு பெரிய ஹோம்வொர்க் கொடுத்தார். ரெண்டு கோடு போட்ட நோட்ல அவனுக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தைய   25 பக்கம் எழுதிட்டு வரச் சொல்லிருந்தார். அதை கலர் பென்சிலில் எழுதச் சொல்லியிருந்தார். அவன் எழுதியிருந்தது... பன்னீர் சார், பன்னீர் சார், பன்னீர் சார்....

அடுத்த ஞாயிறில் அன்சாரியின் அத்தா செத்துப்போனதால், ஆந்திராவிலிருக்கும் அவங்க நனிமா வீட்டுக்கு குடிபோய்ட்டதாக சொல்லிக் கொண்டார்கள். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு...
சமீபத்தில்  முகநூலில் என்னை  பார்த்திருக்கிறான். மாணவர்களோடு நான் இருக்கும்  புரொபைல் படத்தைப் பார்த்து விட்டு அலைபேசியிருந்தான். "டேய் உன் போட்டோ பார்த்ததும் பன்னீர் சார் தான் நாபகத்துல வந்தார்டா" என்றான். எனக்கு பெருமையாக இருந்தது. அவரைப் பற்றித்தான் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தான். இத்தனைக்கும் அவர் அடிப்பார்; திட்டுவார். அதைக் கடந்து அவரை எல்லாரும் நேசித்தோம். அவர் வகுப்பறையில் ஒரு உயிர் இருந்தது. மற்ற ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளிலிருந்து அவரது அருமையைப்  புரிந்து வைத்திருந்தோம். அவ்வப்போது அவர் பாடும் பாட்டு அந்த வகுப்பறையைச் சுத்திகரித்தது. மனிதம் என்ற சொல்லை என்னவென்றே புரியாத வயதில் அவர் பாட்டு போதித்தது. அதில் இறை இருந்தது.

அவர் டியூசன் நடத்துகிறேன் எனும் பேரில்
விளையாட்டு மையம் தான் வைத்திருந்தார். அம்பது அறுபது பேர் படிப்போம். எங்களை எப்போது படிக்கச் சொல்லணும் என்பது அவருக்கு நன்றாகத்  தெரிந்திருந்தது. "உங்களுக்கு கிரிக்கெட்ட விட்டா எதுரா பிடிச்ச வெளையாட்டு". "கிட்டிப்புள், காவியம் மணிக்காவியம் சார் (பச்சக் குதிரை) " என்றோம். "ஒரு நாள் கிட்டிப்புள் வெளையாடலாம் எடுத்திட்வா" அவர் எங்களோடு கிட்டிப்புள் விளையாடினார். ரெண்டு காலையும் அகற்றி நின்றுகொண்டு அவர் கீந்தி விட்ட கிட்டி உயரப்பறந்து பக்கத்துக் கொட்டத்திற்குள் போய் விழுந்தது. அங்கிருந்த பெரிசிடம் போய் கெஞ்சி வாங்கியாந்தோம். இப்படித்தான் ஒரு முறை சார் சிக்ஸ் அடிக்க, பால் எதிர்புறமிருந்த ஒரு மொட்டை மாடிக்கு போய் விட்டது. அந்த வீட்டிலிருந்த ஒரு குண்டுப்பெண் சத்தம்போட்டார். எவன்டா எறிஞ்சது என அந்தப் பொம்பளை 'டா' போட்டுப் சாரை பேசியது எங்களுக்கு அவமானமாக இருந்தது. அடுத்த வாரம் டியூசன் இல்லாத ஒரு நாளில் அந்த வீட்டுக் கண்ணாடி ஜன்னலில் யாரோ கல்லெறிந்திருந்தார்கள்.

பெரிய மனுசத் தோரணை அவரிடம் சுத்தமாகக் கிடையாது. அவர் அதை வரவழைத்துக் கொள்ளும் தருணங்கள் தான் நமக்கு சிரிப்பூட்டும்.
ஒரு நாள் பக்கத்தில் இருந்த மாட்டுக் கொட்டத்தில் பந்து போய் விழுந்து விட அந்த பெருசு சண்டைக்கு வந்து விட்டார். "சின்னப்பசங்க தெரியாமப் பண்ணிட்டாங்க" என சமாதானம் பண்ணிப்பார்த்தார். பெரிசு கேட்பதாக இல்லை. இவர் எங்களை நோக்கி கத்திக் கொண்டே பாய்ந்தார்.. சும்மா அங்கிருந்த ஆதவனை அடிக்க கையை ஓங்குவதை போல நடித்தார்.  அப்புறம் ஒரு வழியாக சமாதானமாகிப் போன அந்த பெரிசுக்கு நடந்த உண்மை தெரியாது. அந்தப் பக்கம் சிக்ஸ் அடிச்சதே பன்னீர் சார் தான். பெருசு கத்திக் கொண்டே டியுசனுக்குள் நுழையும் போது வேகவேகமாக ஒடிவந்து உக்கார்ந்து படிப்பதைப் போல நடித்திருந்தோம். சாரும் ஒடி வந்து சேரில் உக்கார்ந்து கொண்டு   மூஞ்சியைத் தூக்கிவைத்தபடி அங்குமிங்குமாக ஏதோ கோவக்காரர் போல திரும்பிப் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்ததை இமைக்காமல் ரசித்துக்கொண்டிருந்தேன்.

காவியம்
மணிக்காவியம்
லாகு
கொக்கு
லட்சத்தின் தீவு
லட்சத்தின் கொக்கு
லட்சத்தின் மணல் வாரி
.......
சூடா...?
ஸ்ட்ராங்கா....?

இதற்கு குனிந்திருப்பவன் பதில் சொன்னால் அவன் மேலேறி நச்சென ஊன்றி உக்காருவதும் அல்லது பின்புறம் புட்டத்தால் இடிப்பதுமாக விளையாடுவோம். சார் குனிந்து நாங்கள் அவர் முதுகைத் தொட்டுத் தாவியது - என் பள்ளி வாழ்வில் எந்த ஆசிரியரும்  தந்துவிடாத ஓர் பேரனுபவம். அவரைப் பிடித்திருந்ததாலேயே அவர் நடத்திய பாடமும் பிடித்திருந்தது. அதில் எல்லாரும் நல்ல மார்க் எடுத்ததற்கு வகுப்பறைக்கு வெளியிலான செயல்பாடுகளும் காரணமாக இருந்தன.

அவர் சொன்னால் உணவைக் கூட மாற்றித் தேர்ந்தெடுப்போம். "எனக்கு அப்ளம்ன்னா ரொம்ப பிடிக்கும்டா'' எனச் சொன்னார். அடுத்த முறை வீட்டில் அம்மா  இலையில் வட்ட அப்பளம் வைக்கும் போது  பன்னீர் சார் ஞாபகம் வந்தது. உண்மையிலேயே அன்று தான் அந்த அப்பளத்தை ரசித்துச் சாப்பிட்டேன். ருசியாக இருந்தது. "எங்க சார மாறியே தான் எனக்கும், அப்ளம்னா ரொம்பப் பிடிக்கும்" என சொல்லிக் கொண்டு திரிந்தேன்.  ருசி எங்கிருந்து பிறக்கிறது என்பதில் இப்போதும் எனக்கு குழப்பம் தான்.

(எழுதலாம்)

Comments

Popular Posts